இலுப்பிலி ஏரி, எலச்சிபாளையம், திருச்செங்கோடு.
TIRUCHENGODE HISTORY
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது.
சேலம் மாவட்டத்தின் வழியாக, மல்லசமுத்திரம் ஒன்றியம் ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, பருத்திப்பள்ளி, கொன்னையார் அகரம், பள்ளக்காடு வழியாக வரும் திருமணிமுத்தாற்றின் உபரிநீர், மழைக்காலங்களில் இலுப்புலி ஏரி வழியே சென்று இலுப்புலி, மாணிக்கம்பாளையம், கூத்தம்பூண்டி, லத்துவாடி, செருக்கலை, புதுப்பாளையம், பரமத்திவேலூர் காவிரி வரை செல்லும். தொடர் மழை பெய்து வருவதால், இந்த ஏரியில் நீர் வற்றாமல் உள்ளது.
ஊராட்சியின் மூலம் ஒரு வருடத்திற்கு முன்பு, ஏரியை ஆழம் மற்றும் அகலப்படுத்தி, மீன்கள் வளர்க்கப்படுகின்றன. சுற்றுப்புற விவசாயிகள், ஏரி அருகில் உள்ள தங்களது நிலங்களில் கிணறு அமைத்து, இறவை பாசனம் மூலம் நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மன்னர்கள் வாழ்ந்த இவ்வூரில் சிவகாமி உடனமர் சீர்காழிநாதர், வரதராஜ பெருமாள், பாண்டீஸ்வரன், கருப்பணார், ஓம்காளி அம்மன், அத்தாயி அம்மன், பொன்னாச்சிஅம்மன், அண்ணமார்-ராக்கி அண்ணன் ஆகியோருக்கு கோயில்கள் உண்டு. மேலும், கிறிஸ்தவ ஆலயமும் உள்ளது.
உபரித்தகவல்: சேலம், திருப்பத்தூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், முதன்முதலாக ஆங்கிலேயர்களால் 1919ம் ஆண்டு காவல் நிலையம் இலுப்புலியில் தான் ஏற்படுத்தப்பட்டது.

Video Credit: https://www.youtube.com/@namakkall